தமிழகத்தில் போகி பண்டிகை இன்று காலை முதலே விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் காற்றின் மாசு மோசமடைந்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பொதுவாக பொங்கல் பண்டிகை அதற்கு முந்தைய நாள் போகி கொண்டாடப்படும். பழையன கழிதலும்.. புதியன புகுதலும் என்ற கருத்துக்கு ஏற்ப போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீட்டில் பயன்படுத்தாத, பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பதால், நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் நீங்கும் என்பது போகி பண்டிகையின் நம்பிக்கையாகும்.
தமிழகத்தின் பல இடங்களில் போகிப்பண்டிகை இன்று உற்சாகமாக மேளம் அடித்து பழைய பொருட்களை எரித்து கொண்டாடப்பட்டது.
சென்னையில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பல பொருட்களை எரிப்பந்தால் எழுந்த புகையால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் புகை சூழ்ந்தது. மேலும் காற்றின் தரமும் மோசமாடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மணலி, ஆலந்தூர், கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகை மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
8 மணி நிலவரப்படி காற்றின் தரக்குறியீடு, சென்னையில் பெருங்குடி - 120, மணலி- 121 , எண்ணூர் – 128, ஆலந்தூர்- 165, அரும்பாக்கம்- 115, கொடுங்கையூர் - 140 என்ற அளவீட்டில் காற்று மாசு அடைந்துள்ளது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக மற்ற நாளில் 80 வரை இருக்கும் நிலையில் நகரில் தற்போது காற்றின் தரம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால், தற்போது பலருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது. மேலும் காற்றின் தரம் மோசமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.