பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது பாலியல் குற்றப் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து நடிகரும் பள்ளியின் தலைவர்களில் ஒருவருமான ஒய்.ஜி.மகேந்திரனை அணுகிக் கேள்வி எழுப்பினோம். அவர் நமக்கு அளித்த பதில் பின்வருமாறு,
ஒய்.ஜி.மகேந்திரன் பள்ளிக்கு எழுதிய கடிதம்
‘பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியை நானோ எனது மகள் மதுவந்தியோ நடத்தவில்லை.நான் அந்த பள்ளியில் ஒரு டிரஸ்டிதான். இந்த புகார் பார்த்ததுமே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பள்ளிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.முழுக்க முழுக்க இந்த பள்ளியின் நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்வது எனது தம்பி மனைவியும், தம்பியும்தான்.இப்படி குற்றச்சாட்டு வருகிறது. உடனடியாக இது என்னவென்று விசாரிக்க வேண்டும் என கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த புகார்களால் எனது தாயின் பெயர் கெட்டுவிடக்கூடாது. மீண்டும் சொல்கிறேன்,இந்த பள்ளியில் நான் ஒரு டிரஸ்டிதானே தவிர பள்ளியை நான் நடத்தவில்லை. எனது தாய்க்கு பிறகு எனது தம்பி மனைவியும், தம்பியும் மட்டுமே இந்த பள்ளி நிர்வாகத்தை கவனிக்கிறார்கள். ஆனால், பள்ளிக்கு நான் கடிதம் எழுதிய பின்னர் எனக்கு அங்கிருந்து கிடைத்த தகவல் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இதற்கு முன் வந்ததே இல்லை என்கிறார்கள்.இந்த பள்ளியை நடத்துவதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. அதனை முழுக்க முழுக்க அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள்’ என பதிலளித்திருந்தார்.