கரூரில் போதைப் பொருளுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது குறித்து, அண்மையில் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் ஆளுநர் ரவியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதை கண்டித்து, அதிமுக சார்பில் மனிதசங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில், கரூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெற்றது.
கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் மாநகரில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஜவஹர் பஜார் முதல் கோவை சாலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளர் மான எம் ஆர் விஜயபாஸ்கர், “இன்றைய முதலமைச்சரின் குடும்பத்திற்கு நெருக்கமான சாதிக் என்பவர் பல்லாயிரம் கோடி ரூபாய் போதைப் பொருட்களை கடத்தி அது வெளிநாட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் இந்த திமுக அரசில் அங்கம் வகிக்கக்கூடிய சட்டத்துறை அமைச்சர் சொல்கிறார் எங்களுக்கும் சாதிக்பாஷாவிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று.
இன்றைய முதலமைச்சர், முதலமைச்சரின் மகன் உதயநிதி, முதலமைச்சரின் தங்கை கனிமொழியோடு போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். முதலமைச்சரின் மருமகள் தயாரித்து வெளியிடும் படங்களுக்கு முதலீடு செய்கிறார் . அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களுக்கும் சாதிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார். பல கோடி ரூபாய் எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது யார்கெல்லாம் கொடுத்திருக்கிறார் என்ற உண்மை வெளிவந்தால் திமுக அரசு வீட்டுக்குச் செல்லும். அதே போன்று பள்ளி மாணவர்களுக்கிடையே போதைப் பழக்கம் அதிகமாகி உள்ளது என இரண்டு வருடங்களாக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் கூறிய நிலையில் இந்த திமுக அரசு போதைப் பொருட்களின் நடமாடத்தை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் விடியா திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.