குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நேற்று அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு நடைமுறைக்கு கொண்டுவந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 


இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என தெரிவித்தது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “ குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டவரைவாக இருந்த நிலையிலேயே எதிர்த்தோம், நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தோம்! சட்டமானதும்  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தினோம், பேரணி நடத்தினோம்; போராடினோம்! ஆட்சிக்கு வந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்! நடைமுறைப்படுத்தப் போவதாக ஒன்றிய அமைச்சர் பேசியபோது, “தமிழ்நாட்டில் CAA கால்வைக்க விடமாட்டோம்” என உறுதிபட அறிவித்தேன். நேற்று CAA Rules 2024 அறிவிக்கை வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் ஒருமுறை உரத்துச் சொல்கிறேன்: தி.மு.க அரசு தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படுவதை நிச்சயம் அனுமதிக்காது!” என குறிப்பிட்டுள்ளார். 






மேலும் அந்த எக்ஸ் பதிவில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது முதலமைச்சர் ஸ்டாலின் தான் பேசியதையும் காணொலியாக இணைத்துள்ளார்.