இந்து சமயஅறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் , அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பிள்ளார். அதில் அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது குற்றநடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதோ அந்த அறிக்கையின் முழுவிபரம் அப்படியே!
கடிதத்தில் உள்ள விபரம்...
அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் சட்டப்படியான உரிமை இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது ஆணையரின் எழுத்து மூலமான புகாரின் (Complaint) பேரில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டப்பிரிவு 79 (B) (3)யில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒவ்வொரு நிகழ்விலும் ஆணையர் மட்டுமே புகார் செய்வது என்பது இயலாது என்பதால் 1973ம் ஆண்டைய இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி குற்ற நிகழ்வு குறித்து அறிந்த எந்தவொரு நபரும் ஆக்கிரமிப்பாளர் மீது எழுத்துமூலமான புகாரினை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிக்கு அளிக்கும் வகையில் சட்டப்பிரிவு 79 (B) (3)ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பார்வைக்குறிப்பு 1ல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட சட்டம் பார்வைக்குறிப்பு 2ல் காணும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு அதன் நகல் பார்வைக்குறிப்பு 3ல் காணும் குறிப்பில் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
2. எனவே, அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுமின்றியும், உரிய வாடகையினை செலுத்தாமலும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய காவல் நிலையத்தில் முறையாக புகார் மனு அளித்திட சம்பந்தப்பட்ட அறநிறுவனங்களின் அறங்காவலர்கள் அல்லது தக்கார் அல்லது செயல் அலுவலர்களை அறிவுறுத்தப்படுகிறது.
3. இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் படி குற்ற நிகழ்வு குறித்து அறிந்த எந்த ஒரு நபரும் புகார் மனு அளித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை சட்டப்படியான உரிமையின்றி அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து திருக்கோயில் நிர்வாகிகள்
விழிப்புணர்வுடன் செயல்பட்டு விரைந்து ஆக்கிரமிப்புதாரர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஆக்கிரமிப்புதாரர்களுக்கெதிராக தனிநபர்களால் காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகார் மனு மீதான விசாரணைக்கு தேவையான ஆவணங்களையும், முழுமையான ஒத்துழைப்பையும் காவல்துறைக்கு வழங்கிட வேண்டுமென திருக்கோயில் நிர்வாகிகளை அறிவுறுத்தப்படுகிறது.
4. இதன் நகலை அனைத்து திருக்கோயில் நிர்வாகிகளுக்கும் அனுப்பிட இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்களை அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்