சொத்து வரி உயர்வு செல்லும்:


சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சொத்து வரியை அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில் இந்த உயர்வு 2022-23ஆம் ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு முதல் அமலுக்கு வந்தது.


இதனையடுத்து சொத்துவரி உயர்வுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததோடு வரி உயர்வை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், சொத்து வரியை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகளை நிராகரித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


100 சதவீத உயர்வு:


நோட்டிசை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த ஆணையிட்டுள்ள நீதிமன்றம், சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சி இணையதளங்களை மேம்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.


600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் சொத்து வரியும், 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரியும் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. 


மேலும் 1,201 முதல் 1,800 சதுர அடி வரை 75 சதவீதமும், 1,800 சதுர அடிக்கு அதிகமான கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது.  வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் வரி உயர்வு செய்யப்பட்டது.


பொருளாதார நிலை:


இதனிடையே தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவைப்படும் கூடுதல் செலவீனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.


மேலும் படிக்க: DMK and Industrial Development : ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு..3 லட்சம் வேலைவாய்ப்புகள்.. தொழில் முன்னேற்றத்தில் முழுமூச்சாக இறங்கிய திமுக அரசு