QR Code மென்பொருள் செயலி அறிமுகம்


சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ் “விரைவு துலங்கல் குறியீடு QR Code" மென்பொருள் செயலியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தி வைத்தார். இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில், 


 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான "விரைவு துலங்கல் குறியீடு - QR Code" GLOST GLITT செயலியை தொடங்கி வைத்தார். மேலும், ஈரக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்திற்கு “செழிப்பு” என பெயரிட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தினார்.


தமிழ்நாடு அரசு நிர்வாக செயல்பாடுகளில் டிஜிட்டல் மயமாக்குதல் என்பது வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் தங்களது பணியினை மேம்படுத்தி மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை செய்திட வழிவகுக்கும்.


சொத்து வரி செலுத்தலாம்


மேலும், சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி நிலுவைகளைப் பற்றிய அறிவிப்பை பெற்று செயலி மூலமே தொகையை செலுத்தலாம். பிறப்பு, இறப்பையும், வீட்டிலிருந்தவாறே விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர் குறியீடு) ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகார் / கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விவரங்கள், அவற்றின் நிலைப்பற்றியும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.


அத்துடன், உள்ளாட்சி கட்டமைப்புகளான, பூங்காக்கள். பேரூந்து நிலையங்கள். எரியூட்டு மயானம், மார்க்கெட், விளையாட்டு மைதானம், நகர்நல மையம், கழிப்பறைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர் குறியீடு) மூலம் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தால் உள்ளாட்சிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அக்கட்டமைப்புகளை மேலும் நல்ல முறையில் மக்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.


புகார் தெரிவிக்கலாம்


இவ்வாறு பொதுமக்கள் விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர் குறியீடு) மூலம் தெரிவிக்கும் கோரிக்கைகள் / புகார்கள் அனைத்தும் உள்ளாட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஒருங்கிணைந்த முறையில் பெறப்படும். பின்பு அவை தொடர்புடைய அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படுவதால் பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்தும் இந்த "சீர்மிகு ஆளுமை” திட்டத்தின் மூலம் முழுமையாக செயல்படுத்தப்படும்.


இந்த நிகழ்ச்சியில்,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பொன்னையா, ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.