கன்னியாகுமரியில் சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா இரண்டு லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.


திருச்செந்தூர் அருகில் உள்ள கோவில் ஒன்றில் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போர்விளை பகுதியைச் சேர்ந்த ஆடல், பாடல் இசைக் கச்சேரிக் குழுவினர் 12 பேர் நேற்று நிகழ்ச்சி நடத்தச் சென்றனர். அவர்கள் தங்களுடைய சுமோ வாகனத்தில் சென்றிருந்தனர். இரவு அங்கேயே தங்கிவிட்டு இன்று காலையில் வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.


இவர்களின் சுமோ கார், திருநெல்வேலி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று  கொண்டு இருந்தபோது வெள்ளமடம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்தும், சுமோவும் நேருக்கு, நேர் மோதின. இதில் சுமோ ஓட்டுநர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். படுகாயம் அடைந்த 8 பேர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,


”கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம். செண்பகராமன்புதூர் கிராமம். லாயம் விலக்கு பகுதியில் இன்று (12-5-2023) காலை நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியாபுரம் சென்ற பேருந்தும், திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் வந்த நான்கு சக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சதிஸ், த/பெ.ராமசாமி. கைதக்குழி காலனி, திருவிதாங்கோடு (வயது-37), திரு.கண்ணன், த/பெ.ராஜன் சிதறால் அருமனை (வயது-23) அஜித், த/பெ.சதிஸ்குமார், அம்பங்காலை, திருவரம்பு (வயது-22) மற்றும் அபிஷேக், த/பெபீர்கன், குழிச்சாணி. அருமனை (வயது-22) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சஜிதா. நெய்யாற்றின்கரை. கேரளா மாநிலம் (வயது-37), நிதிஸ் த/பெ.இராமசாமி, அம்பாங்காலை திருவரம்பு (வயது-22),  விக்னேஸ், த/பெ.ஜெனில்குமார். காளச்சந்தை, மார்த்தாண்டம் (வயது-22), நிசாந்த், த/பெ.இராமசாமி, அம்பாங்காலை திருவரம்பு (வயது-18).  சஜின் த/பெ.சஜிஸ்பாபு, கள்ளிக்கோட்டை சிதறால் (வயது-18) மற்றும் சிறுமி அனாமிகா. நெய்யாற்றின்கரை, கேரளா மாநிலம் (வயது-11) ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும். ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்த தீவிர சிகிச்சை பெற்று வரும் ஆறு நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.