DMK GOVT ON ELECTRICITY: மின்துறையில் வெளிச்சம் பாய்ச்சிய தமிழக அரசு.. சாதனைகள் என்ன?


கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கண்ட தோல்விக்கு முக்கிய காரணம் மின்வெட்டு. அதன்மூலம் கிடைத்த படிப்பினை காரணமாகவே, 2021ம் ஆண்டு மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும், மின்சாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகள் மீது தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக மின்சாரத்துறையில் சற்றே கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்றே கூற வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பருவமழை காலத்தின் போது ஏற்பட்ட மின்வெட்டு பிரச்னைகளும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு துரித கதியில் சரி செய்யப்பட்டது இதற்கு முக்கிய உதாரணமாக உள்ளது.


15 மாதத்தில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள்: 


எரிசக்தி துறையின் 2021-22ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மாநிலத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின்,  விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.3,025 கோடி  மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்து,  2022-23ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், நடப்பு நிதியாண்டில் 50,000 எண்ணிக்கையில் புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் விளைவாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் 15 மாதங்களிலேயே, 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின் பத்தாண்டுகள் சேர்த்து மொத்தமாகவே 2 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகளுக்கு தான் மின்  இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  ஆனால் திமுக அரசு அமைந்த 15 மாதத்தில், இந்தியாவில் வேறெந்த மாநில அரசும் செய்யாத அளவிற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகள்  வழங்கி சாதனை படைத்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


மின்னகம்:


வாடிக்கையாளர்களின் குறைகள் மற்றும் புகார்களை பெற்று அதற்கு தீர்வளிக்க தொலைதொடர்பு நிறுவனங்கள் போன்றவை வைத்துள்ள, சேவைய மையங்களை போன்று, மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தை கடந்தாண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 3.10 கோடி மின் நுகர்வோர், தங்களது மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள், புதிய மின் இணைப்பு பெறுவதில் ஏற்படும் காலதாமதம், மின்னழுத்த ஏற்ற, இறக்கம், மின் கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், மின் தடை, சேதமடைந்த மின் கம்பங்கள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின் மாற்றிகள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள்,  குறைந்த மற்றும் உயர் மின்னழுத்தம் உள்ளிட்ட புகார்களை சேவை மையத்தில் தெரிவிக்கலாம்.


99% புகார்கள் மீது நடவடிக்கை:


24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவை மையத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் கணினி மூலம் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர், செயற் பொறியாளர், உதவிப் பொறியாளர் அலுவலகங்களுக்கு அனுப்பிவைத்து, அதன் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகார்தாரரின் செல்போன் எண்ணுக்கு புகாரின் எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு, அப்புகார்கள் சரி செய்யப்பட்டவுடன், அதுகுறித்த தகவலும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. இந்த மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.  இந்த மின்னகம் தொடங்கப்பட்ட முதல் ஓராண்டு காலத்திலேயே 10 லட்சம் புகார்கள் பெறப்பட்டதோடு, அதில் 99% புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் மின்மாற்றிகள்:


கூடுதல் மின்பளு மற்றும்  குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க,  தமிழ்நாடு மின் உற்பத்தி  மற்றும் பகிர்மான கழகம் சார்பில், 8, 905 புதிய மின்மாற்றிகளை, ரூ.625 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் அமைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம், கூடுதல் மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் போன்ற காரணங்களால், மின்மாற்றிகள் பழுதடைந்து பொதுமக்கள் மின்வெட்டால் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலமைச்சர் ஸ்டாலினின் இலக்கு:


இதனிடையே, தமிழக மின்சாரத்துறையை மேம்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது,  தமிழ்நாட்டில் தற்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களினுடைய திறன் 34 ஆயிரத்து 867 மெகாவாட். மின்தேவையை கருத்திற் கொண்டு அனல் மின் நிலையங்கள் மட்டுமல்லாமல், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தியின் மூலம் 6,000 மெகாவாட் சூரிய ஒளி மின்நிலையங்கள், 14,500 மெகாவாட் நீரேற்றுபுனல் மின் உற்பத்தி நிலையங்கள், 5,000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள், 2,000 மெகாவாட் மின்கலன் சேமிப்பு நிலையங்கள், 3,000 மெகாவாட் திறனுக்கு வாயுசுழலி எரிசக்தி நிலையங்கள் என,  மொத்தம் 30,500 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையங்களை தமிழ்நாடு மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டின் மின் உற்பத்தி வருகின்ற 2030-ஆம் ஆண்டில் 65 ஆயிரத்து 367 மெகாவாட் திறனாக உயரும் என்றார்.


தமிழகத்திலுள்ள மாவட்டங்கள் அனைத்தையும் சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. இதனால், தமிழ்நாடானது, மின்உற்பத்தியில் முழுமையாக தன்னிறைவு பெறுவதோடு மட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் மின் உற்பத்தியில் முதல் மாநிலமாகத் திகழும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.