மதுரை காமராஜர் பட்டமளிப்பு விழாவை பேராசிரியர்கள், சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் புறக்கணித்த நிலையில், அவர்களுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (நவ.2) பல்கலைகழக வளாகத்தில் காலை 10.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு  1,34,531 மாணவ - மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். 


பலத்த பாதுகாப்பு


கடந்த வாரம் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் எதிரொலியாக, ஆளுநர் வருகையை முன்னிட்டு பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பட்டமளிப்பு விழா நிகழ்வை முன்னிட்டு பல்கலைக்கழக முழுவதிலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


1.34 லட்சம் மாணவர்களுக்குப் பட்டங்கள்


இந்த விழாவில், காமராஜர் பல்கலைக்கழக வளாக மாணவர்கள் மற்றும் பலக்லைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் மாணவர்கள் 1,34,531 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 748 பேருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாகப் பட்டங்களை வழங்கினார். அதில் 605 பேருக்கு முனைவர் பட்டமும், 143 பேருக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன.


இதற்கிடையே சுதந்திரப் போராட்ட வீரரும் தியாகியுமான சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் அளிக்க ஆளுநர் அனுமதி மறுப்பதாகக் கூறி, மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை, துணை வேந்தரும் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி புறக்கணித்தார்.


பேராசிரியர்கள், சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் புறக்கணிப்பு


இந்த நிலையில், மதுரை காமராஜர் பட்டமளிப்பு விழாவை பேராசிரியர்கள், சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் புறக்கணித்தனர். அவர்களுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''விடுதலைப் போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த பேராசிரியர்கள் சுரேஷ், ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15-க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்'' என்று பதிவிட்டுள்ளார்.


முன்னதாக, தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்து மாணவர் காங்கிரஸ் அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழக நுழைவு வாயில் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று கருப்புக் கொடி காட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.