தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கடுமையான வானிலை நிலவுகிறது. வழக்கமாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மண்டையை பிளக்கும் அளவு வெப்பநிலை பதிவாகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் கரூர், நாமக்கல், வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.






அதிகப்படியான வெப்பநிலை காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை  வீசி வருகிறது. இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் மே 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெப்ப அலை மிகவும் மோசமாக இருக்கும் என்றும் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் நற் செய்தியாக மே 5 ஆம் தேதி முதல் உள் மாவட்டங்களில் மழை இருக்கும் என தெரிவித்துள்ளார்.






மேலும், ”கடந்த காலங்களை ஒப்பிடும் போது மே 29 ஆம் தேதி 2003 ஆம் ஆண்டு திருத்தணியில் அதிகபட்சமாக 48.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதே ஆண்டு சென்னையில் மே 31 ஆம் தேதி 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கடந்த 230 ஆண்டுகளில் அதிகபட்சமாக பதிவான வெப்பநிலை இதுவே ஆகும்” என தெரிவித்துள்ளார்.