காஞ்சிபுரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புக்கள் தானம். உடல் உறுப்புக்கள் தானம் வழங்கப்பட்ட இளைஞர் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

உடல் உறுப்பு தானம் செய்வது மகத்தான செயலாக பார்க்கப்படுகிறது. உயிர் என்பது விலை மதிப்பற்ற ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், பல நேரங்களில் சரியான உடல் உறுப்பு கிடைக்காததால் உயிரிழப்புகள் நிகழ்வதுண்டு. இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.




இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தை சேர்ந்த கோபி (22) என்பவர் சில தினங்களுக்கு முன்பு விபத்தில் படுகாயமடைந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.



 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கோபி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மூளைச்சாவு அடைந்த கோபியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர் முன் வந்தனர்.  இறுதி சடங்கிற்காக கிளார் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட இளைஞர் கோபியின் உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசன், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் உள்ளிட்டோர் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் தமிழ்நாடு:


மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்பை பெறும் திட்டம், தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, 1,706 பேரிடமிருந்து உடல் உறுப்பு பெறப்பட்டுள்ளது. 786 இதயங்கள், 801 நுரையீரல், 1,566 கல்லீரல், 3,047 சிறுநீரகங்கள், 37 கணையம், ஆறு சிறுகுடல்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இந்த திட்டத்தின் முலம் பெற்று மக்கள் பயன் அடைந்துள்ளனர். உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்யும் உரிமத்தை பெற்ற மருத்துவமனைகளை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.



சிறந்து விளங்கும் தமிழ்நாடு:


உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.




குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.