தமிழகத்தை புரட்டி போட்ட கனமழை:


டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தை விட இந்த ஆண்டு பெய்த கனமழையால் சென்னை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதாவது, ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பொழிந்துள்ளது.


இந்த பேரிடரின் ஈரம் காய்வதற்குள் தென் மாவட்டங்களில் 100 ஆண்டுகளுக்கு பின் பெருமழை வெள்ளம் கொட்டித் தீர்த்தது.  டிசம்பர் 17,18ஆம் தேதிகளில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளி மண்டல சுழற்சி காரணமாக வரலாற்றில் இல்லாத அளவு மழை கொட்டியது. குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லையில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


தமிழ்நாட்டை புரட்டி போட்ட இரண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000  நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களை பொருத்தவரை, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சென்னையில் நிவாரண தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், தென் மாவட்டங்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.


முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி:


இந்த நிலையில், தமிழ்நாட்டின் மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.


இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.  தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமரிடம் தமிழகத்தின் வெள்ள பாதிப்புகளை விளக்கினேன்.






 மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் தெரிவித்தேன்.  மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்கள் வெள்ள பாதிப்புகளை சரி செய்ய தேவையான உதவிகளைச் செய்வதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார்.  வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்புவதாக பிரதமர் மோடி கூறினார்" என்று பதிவிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். 


தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய அமைச்சர்:


முன்னதாக, கடந்த 21ஆம் தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதியாக ரூ.12,000 கோடி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், தமிழ்நாட்டு பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். 


இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு வரும் 26ஆம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தருகிறார். தூத்துக்குடி வெள்ள பாதித்த பகுதிகளை நிர்மலா சீதாராமன் பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.