தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.


”வளர்ச்சி அடைந்த பாரதத்தை  நோக்கி பயணிக்கும் நாடு”


இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நாடு வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நோக்கத்தை நோக்கி பயணித்து வருகிறது.  வளர்ச்சி அடைந்த பாரதத்தில் வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டின் பங்கு மகத்துவமானதாக இருக்கும். தூத்துக்குடி, நெல்லையை மையப்படுத்தி பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  


தூத்துக்குடியின் வளர்ச்சி புதிய அத்தியாத்தை உருவாக்கியுள்ளது. தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள், இந்தியாவில் வளர்ச்சிக்கு உந்துதலாக  இருக்கும். வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கி உள்ளது. ரூ.4500 கோடி திட்டங்களால் தமிழ்நாட்டின் சாலை வழி தொடர்புகள் மேம்படும்.


பயண நேரம் குறையும். ஹைட்ரஜன் படகு காசியின் கங்கை ஆற்றில் தன் பயணத்தை தொடங்கவிருக்கிறது. காசிக்கும், தமிழ்நாட்டிற்குமான உறவு மேலும் வலுப்பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.   நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது" என்றார். 


தமிழ்நாடு அரசு பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு:


தொடர்ந்து பேசிய அவர், ”இப்போது, கசப்பான உண்மையை சொல்கிறேன். முந்தையை காங்கிரஸ் ஆட்சியின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியில் கோரிக்கையாக இருந்தவை அனைத்தும், தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 


காங்கிரஸ் ஆட்சியில் காகித வடிவில் இருந்த நலத்திட்டங்கள் இப்போது நிறைவேறுகின்றன. மக்களின் சேவகனாக உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்று வருகிறேன். பல தசாப்தங்களாக கோரிக்கைகளாக இருந்தவற்றை மத்தியில் ஆளும் பாஜக நிறைவேற்றி வருகிறது.  


மத்திய அரசு திட்டங்களால் தமிழ்நாடு புதிய சகாப்தை படைக்க உள்ளது. தடைகளை தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபடும். தடைகளை எல்லம் தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை  செயல்படுத்தி தீருவோம்.  மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் மறைக்கப்படுகின்றன.  திட்டங்கள் குறித்து செய்தித் தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை.


மூன்றாது முறையாக நான் ஆட்சி அமைக்கும்போது மோடியின் உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும்.  தமிழகம் வரும்போதெல்லாம் தமிழர்கள் என் மீது பாசத்தை பொழிகிறார்கள்.  தமிழர்கள் என் மீது காட்டிய அன்பை  பலமடங்காக திருப்பித் தருவேன். தமிழகம் வளர்ச்சியில் தமிழர் நலனில் என்றும் அக்கறையோடு இருப்பேன் என வாக்குறுதி அளிக்கிறேன். இன்று நடக்கும் கொண்டாட்டம், உற்சாகம் தமிழ்நாட்டின் வளர்ச்சி கொண்டாட்டம். உங்கள் தொலைபேசியை எடுத்து டார்ச் லைட் அடித்து காட்டுங்கள். நாட்டு மக்கள் இதனை பார்க்கட்டும்” என்றார் பிரதமர் மோடி.