தை திருநாளாம் பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நேற்று உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும்  பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சுற்றுலா தளங்களுக்கு செல்வார்கள்.


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:


பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளும், நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு போடிகளும் நடைபெற்றது. இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.


அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. இப்போட்டியில் 1200 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் QR கோடுடன் கூடிய டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டோக்கன் பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இன்று போட்டிக்கு முன்பாக இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


குவிந்த காளைகளும், காளையர்களும்:


காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 5 மணி வரை என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறும். போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கோவை, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் பங்கேற்றுள்ளது.


ஜல்லிக்கட்டு போட்டியில் சுவாரசியமான அம்சம் என்றால் அது லைவ் கமண்டரி தான். மாடுகளுக்கு மாடுபிடி வீரர்களுக்கும் ஏற்றவாறு இருக்கும். அதிலும் எக்கசக்கமான பரிசுகள் வழங்கப்படும். இந்த போட்டியில் சிறப்பாக களம் காணும் முதல் மாடிபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசு வழங்கப்படுகிறது. 2  வது இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு பைக் பரிசு வழங்கப்படுகிறது. போட்டியில் முடிவில் 3 வது பரிசு குறித்து முடிவு எடுக்கப்படும்.


மருத்துவ குழு:


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி முனியாண்டி திடலில் உள்ள நிரந்தர வாடிவாசலில் நடைபெறுகிறது. பார்வையாளர்கள் கேலரி, காளை மருத்துவ பரிசோதனை பகுதி, பிறவாடி, காளை கலெக்சன் சென்டர் ஆகிய பகுதிகளில் 2 அடுக்கு இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டியில் ஒவ்வொரு சுற்றுகளுக்கும் 50 மாடுபிடி வீரர்கள் பல வண்ண சீருடைகளில் அனுமதிக்கபடுகின்றனர். போட்டியின் போது ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு தங்க காசு பரிசு வழங்கப்படுகிறது. போட்டியில் விளையாடும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அண்டா  சைக்கிள், பீரோ, கட்டில்,மெத்தை உள்ளிட்ட  பல்வேறு பரிசுகளும் வழங்கப்படுகிறது.


போட்டியை முன்னிட்டு சுகாதாரத்துறை சார்பில் 90 பேர் அடங்கிய மருத்துவக் குழுக்களுக்கும், கால்நடைத்துறை சார்பில் 70 பேர் அடங்கிய மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர். இதை தவிர, நடமாடும் மருத்துவக் குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போட்டியில் காயம் ஏற்படும் மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் 15, 108 ஆம்புலன்ஸ்கள், கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு பணிக்காக மாவட்ட எஸ்பி டோங்கரே தலைமையில் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதியில் இருந்து நேரடியாக வந்து திரும்பும் பகுதி என்பதால் காளைகள் நின்று விளையாடும் என்பதாலும் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தும் களம் என்பதாலும் போட்டியில் சுவாரஸ்யம் அதிகரித்து காணப்படுகிறது.