அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து ஜுலை 20ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின்  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


அதிமுக அறிவிப்பு:


இதுதொடர்பான அறிவிப்பில், “விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலத்தில், தமிழ் நாட்டில் மக்கள் வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும்; துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகளும் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.


மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதாக வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா அரசு, அதை முறையாக செயல்படுத்தவில்லை. விலைவாசி உயர்வு காரணமாக, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.


கழக ஆட்சிக் காலங்களின்போது, இயற்கை இடர்ப்பாடுகளாலும், இன்னும் சில காரணங்களாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்படும் நேரங்களில், அம்மாவின் அரசு தனிக் கவனம் செலுத்தி, அதற்கு ஏற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலமாக மக்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்தது அம்மாவின் என்பதை இந்த நேரத்தில், அரசு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


மேலும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும்; அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டித்தும்; இவைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் பொம்மை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 20.07.2023 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும்; கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்களும், நிர்வாகிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்.


மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், விடியா திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.