பாடலாசிரியர் வைரமுத்துவின் 70வது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.


வைரமுத்து பிறந்தநாள்:


தமிழ் திரையுலகில் தனது எழுத்து திறமையால் இன்றளவும் தவிர்க்க முடியா ஆளுமையாக திகழும், பாடலாசிரியர் வைரமுத்து இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர் மற்றும் நடிகைகள் மட்டுமின்றி, பல்வேறு துறைகளை சேர்ந்த நட்சத்திரங்களும் ரசிகர்களும் கூட வைரமுத்துவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:


அந்த வகையில் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் பெசண்ட் நகரில் உள்ள வைரமுத்துவின் வீட்டிற்கே சென்று சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது, திமுக நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர். பாலு மற்றும் தமிழக அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர். அதோடு, தனது டிவிட்டர் பக்கத்திலும், முதலமைச்சர் ஸ்டாலின், வைரமுத்துவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


டிவிட்டர் பதிவு:


இதுதொடர்பான ட்விட்டர் பதிவில் “கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே! உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.


ரசிகர்கள் வாழ்த்து:


இதனிடையே, தமிழ் ரசிகர்களும் வைரமுத்துவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது கவிதைகளையும், பாடல் வரிகளையும் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.


வைரமுத்து திரைப்பயணம்:


1980 ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய நிழல்கள் என்ற படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற, இது ஒரு பொன்மாலை பொழுது பாடல் தான் வைரமுத்து எழுதிய முதல் பாடல் ஆகும்.  அதைதொடர்ந்து, வைரமுத்து பாடல் எழுதாத படங்கள் இல்லை எனும் அளவிற்கு தொடர்ந்து பாடல்களை எழுடி தள்ளினார்.ம் சுமார் 40 வருட திரை வாழ்வில் 7500 பாடல்களுக்கு மேல் இவர் எழுதியிருக்கிறார். இதில், 7 முறை சிறந்த பாடலுக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார். இதுவரை இந்தியத் திரைப்படத் துறையில் வேறு எந்தவொரு பாடலசிரியரும் இத்தனை தேசிய விருதுகளை பெற்றதில்லை. 


பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட ஆகிய விருதுகளையும் வென்றிருக்கிறார். தமிழ் மொழியில் கவிதைத் தொகுப்புகள், நாவல்கள் என 37 நூல்களை வைரமுத்து எழுதியுள்ளார். அவற்றில் பல ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ரஷ்யன் மற்றும் நார்வேஜியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் நூல், இவருக்கு சாகித்ய அகாடெமி விருதை பெற்றுத் தந்தது. மேலும் 22 மொழிகளில் அந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பொன்மணி என்பவரை திருமணம் செய்துகொண்ட வைரமுத்துவுக்கு மதன் கார்கி, கபிலன் என இரண்டு மகன்கள். இருவருமே கவிஞர்களாக இருக்கின்றனர். இதில், மதன் கார்கி அதிக திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார்.