தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் நூற்றாண்டு விழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் திருவுருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார். கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு கீழே ’’காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’’ என்ற கருணாநிதி எழுதிய பொன்மொழி இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவித், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த விழாவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்த விழாவில் வரவேற்புரையாற்றிய சபாநாயகர் அப்பாவு, 1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அன்றைய சென்னை மாகாண சட்டமன்ற அவையில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் இடம் பெற்றிருந்தன. அந்த அடிப்படையில் இந்த பேரவை தென் மாநிலங்களின் தாய் சட்டப்பேரவையாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களும் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி என்றார்.
இது குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவின் முதல் குடிமகன் கலைஞர் திருவுருவ படத்தை திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன், கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன் என்றார்