நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு சென்னை மாகாணமாக இருந்தபோது, 1921ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. இதன்படி, சென்னை சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நடப்பாண்டில் சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட எண்ணிய முதல்வர், கடந்த மாதம் டெல்லி சென்றபோது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்தார். அவர் ஒதுக்கிய தேதியின் அடிப்படையில், ஆகஸ்டு 2-ந் தேதி(இன்று) சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்பு, முறைப்படி அதற்கான அழைப்பிதழை டெல்லி சென்று குடியரசுத் தலைவரிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் வழங்கினார்.
இதையடுத்து, சட்டப்பேரவை நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து இன்று காலை புறப்படும் அவர் விமானம் மூலம் மதியம் 12.45 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவேற்க உள்ளனர்.
விமானநிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்கிறார். அங்கு மதிய உணவுக்கு பிறகு அவர் சிறிதுநேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர், 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் குடியரசுத் தலைவர், தலைமைச் செயலகத்திற்கு வருகிறார். மாலை 5 மணியளவில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தொடங்க உள்ளது.
இந்த விழாவின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்த மறைந்த முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார். பின்னர், குடியரசுத் தலைவர் சிறப்பு உரையாற்ற உள்ளார். கருணாநிதியின் உருவப்படம் பேரவைத் தலைவர் இருக்கையின் இடதுபுறம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வரிசையில் பின்புறம் கருணாநிதியின் படம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர், பேரவைத் தலைவர், பேரவை துணைத்தலைவர், நீதிபதிகள், அரசியல் கட்சித்தலைவர்கள், எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு தலைமைச் செயலக கட்டிடம், புனித ஜார்ஜ் கோட்டை நுழைவுவாயில், கொத்தளப்பகுதி, போர்நினைவுச்சின்னம் வரை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் வருகையை முன்னிட்டு, தலைமை செயலகத்திற்குள் நேற்று மாலை முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. தலைமைச் செயலக அதிகாரிகள் இன்று பகல் 1 மணிக்குள் பணியை முடித்துச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் ஒத்திகை நிகழ்வுகள் நேற்று நடைபெற்றது. மேலும், குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று விழா நிறைவு பெற்ற பிறகு, குடியரசுத் தலைவர் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.