கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமம் பகுதியில் ஸ்ரீ சத்குரு சதாசிவ பிரமேந்திராள் சித்தர் ஜீவசாமாதியுடன் கூடிய காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. சதாசிவ பிரமேந்திராள் சித்தர் ஜீவசமாதி அடைந்த இங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பிரமுகர்கள் வந்து சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தியானம் செய்து அவரின் அருள் பெற்று சென்றுள்ளனர்.



மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநில பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆண்டு முழுவதும் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை கரூரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.



கடந்த 2 தினங்களாக பிரசித்தி பெற்ற இந்த கோவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் இருட்டில் கடவுளை தரிசித்து செல்கின்றனர். இரண்டு தினங்களாக இருள் சூழ்ந்த நிலையில், சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. மின்விளக்குகள் எரியாத காரணத்தால் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



விரைவில் சம்பந்தப்பட்ட மின்துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் சேலத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆன்மீக பக்தர் ஒருவர் கூறுகையில், நான் பல வருடங்களாக இந்த ஆலயத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன் தற்போது மின்சாரம் இல்லை என்று கேள்விப்பட்டவுடன் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது அதற்கான பணிகளை விரைந்து முடிக்க மின் துறைக்கு எனது பணிவான வேண்டுகோள் இந்த தருணத்தில் வைக்கிறேன் என கூறினார்.


பின்னர் இதை தொடர்ந்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில் 50 வருடங்களுக்கு மேல் நான் இந்த ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது் இரண்டு நாட்களாகியும் மின் பணிகள் இன்னும் முடிக்காத நிலை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனினும் மாவட்ட நிர்வாகமும், மின்துறையினரும் விரைந்து புகழ்பெற்ற ஆலயத்திற்கு மின் இணைப்புகளை சரி செய்து வழங்க வேண்டுமெனவும், இந்த ஆலயத்திற்கு தமிழகம், தவிர கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுவாமி தரிசிக்க வருகை புரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் இல்லை என்பதால் சிலர் வருகை தாமதம் ஆகி இருக்கிறது. அதைப்போல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வர இருப்பதால் விரைந்து மின் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக வழங்கிட ஆன்மீக பக்தர்களின் சார்பாக கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.