சென்னையில் மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர பல மணி நேரம் ஆகும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் தொடங்கப்பட்டது தான் மெட்ரோ ரயில் சேவை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையிம், கோயம்பேடு பேருந்து நிலையம், விமான நிலையம் என பல பகுதிகளில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே பொதுமக்களின் வரவேற்பையடுத்து சென்னையின் பல பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் - மெட்ரோ ரயில்
அந்த வகையில், மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கிய வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதில் பூந்தமல்லி-போரூர் இடையே 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் கட்டடக்கலைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்தது.
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
அடுத்ததாக பூந்தமல்லி-போரூர் இடையே பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப்பணிகள் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கி பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும் ரெயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் கடந்த 3 மாதங்களாக மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சான்றிதழ் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் பூவிருந்தவல்லி - போரூர் இடையிலான மெட்ரோ ரயில் பாதை சிக்னலுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிப்ரவரியில் வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை
விரைவில் ரயில்வே வாரியம் வேகச்சான்றிதழ் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதனையடுத்து ஜனவரி மாதம் மத்தியில் முதல் கட்டமாக போரூர்- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் எனவும், அடுத்தாக வடபழனி வரை இந்த மெட்ரோ ரயில் பாதை நீட்டிக்கப்பட்டு பிப்ரவரி முதல் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக தற்போது இருக்கும் பூந்தமல்லி- வடபழனியில் பகுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட இருப்பது சென்னை மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதிலும் அதிகளவு ஐடி ஊழியர்கள் பணியாற்றும் பகுதியாகவும் இந்த வழித்தடம் இருப்பதால் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கப்போகும் நிலை உருவாகியுள்ளது.