கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து அனைவரையுரம் சோகத்தில் ஆழ்த்திய நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு, நடிகரும் மட்டுமல்லாமல் சிறந்த படைப்பாளி கூட ஆவார்.


நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டு ரங்கன் என்ற நடிகர் பாண்டு 19-02-1947 அன்று பிறந்தார். பழம்பெரும் நடிகர் இடிச்சப்புளி செல்வராஜ் இவரது மூத்த சகோதரர் ஆவார்.


சிறந்த ஓவியரான பாண்டு, சிறுவயதிலேயே ஓவியம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால், சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் டிப்ளமோ பட்டம் பெற்றார். அதன்பின்னர், இப்படிப்பை அகமதாபாத்தில் படித்த அவர், பிரான்சில் இந்த படிப்பிற்காக முனைவர் பட்டம் பெற்றார்.


1970ஆம் ஆண்டு ‘மாணவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இவர், அதன்பின்னர் சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், அஜித், விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.


‘என் உயிர் கண்ணம்மா’, ‘பணக்காரன்’,  ‘நடிகன்’, ‘சின்னத்தம்பி’, ‘காதல் கோட்டை’ போன்ற படங்கள் இவரின் நடிப்புக்கு நல்ல பெயரை கொடுத்தது.  ‘அ ஆன்ன்ன்’ வணக்கம் என்ற இவரின் டயலாக் இன்றளவும் மிகவும் பிரபலமானது. இதனையே தனது அடையாளமாக உருவாக்கிக் கொண்டார். சவுண்டு, முகப்பாவனையைக் கொண்டும் பல நகைச்சுவைகளை செய்து அசத்தியவர்.




 


பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.


தமிழ்நாடு சுற்றுலா துறையின் லோகோவை வடிவமைத்தவர். அதிமுக கொடியையும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான். இதுதொடர்பாக ஒரு பேட்டியில் அவர் கூறுகையில், அதிமுக தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா... என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அதிமுக என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார். அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.


அப்போதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர்.


இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே. சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார்.




அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போதும் கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார்.


அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர்” என்றார்.


தனது  74 வயதில் கொரோனாவுக்கு பலியான பாண்டுவின் மரணம் தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  கொரோனா பாதிக்கப்பட்ட அவரின் மனைவியும்,   தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரகளின் கண்காணிப்பில் உள்ளார் என்பது அதைவிட சோகமாக இருக்கிறது.


கடந்த சில வாரங்களாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த், மூத்த நடிகர் செல்லதுரை, நடிகர் டிகேஎஸ் நடராஜன் ஆகியோரை வரிசையாக உயிரிழந்த நிலையில், நடிகர் பாண்டுவை திரையுலகம் இழந்துள்ளது.