இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தான்.
ஆண்டுதோறும் வரும் தை மாதம் 1 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல். அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வகைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு என் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘தை பிறந்தால், வழி பிறக்கும்’ என்பார்கள். இந்த தை மாதம் சேலத்தில் நடக்கவிருக்கும் நம் திமுகவின் இளைஞரணி மாநில மாநாட்டில் ஒன்று கூடி, இந்திய ஒன்றியத்துக்கே வழிபிறக்கின்ற வகையில் அயராது உழைத்திட உறுதியேற்போம். மாநில உரிமையை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காத்திட தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் சூளுரைப்போம்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ பொங்கல் பண்டிகை பன்பாட்டு திருவிழா, உழவார்களுக்கான திருவிழா மட்டுமல்ல, உழவர்கள் அனைவருக்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா. தமிழரின், தமிழ்நாட்டின் பெருமையை உறக்கச் சொல்லுகின்ற விழா. கடந்த மாதம் கடுமையான மழை வெள்ள பாதிப்புக்ள் ஏற்பட்டது. இயல்பு நிலை திரும்ப தென் மாவட்டங்களில் சுமார் ரூ.1000 கோடி செலவிடப்பட்டது. ரூ.6000 நிவாரணம், மகளிர் உரிமை தொகை ரூ.1000, ரேஷன் கடைகளில் ரூ.1000 என வழங்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் நாளன்று இல்லங்களில் மகிழ்ச்சி பிறக்கட்டும். தை மாதம் நடக்க இருக்கும் இளைஞரணி மாநாட்டில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.