தமிழகத்தில் வரும் நாளை (15 ஆம் தேதி) பொங்கல் பண்டிகை. கொண்டாடப்படுகிறது. 16-ஆம் தேதி மாட்டு பொங்கலும், 17-ஆம் தேதி உழவர் தினம் வருகிறது. பொங்கல் பண்டிகையின்போது விவசாயிகள், பொதுமக்கள் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு படையலிடுவார்கள். இதையொட்டி மளிகை கடைகளில் பொங்கல் வைக்க தேவையான வெல்லம், பச்சரிசி, முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை, பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப் பட்டுள்ளது என்று மளிகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது போன்ற வ.உ.சி பூ மார்க்கெடில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும் பண்டிகையும் முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை பூ ரூபாய் 2,400 க்கும், முல்லை ரூபாய் 2,400 க்கும், ஜாதிமல்லி 1200 ரூபாய்க்கும், காக்கட்டான் பூ 1,200 ரூபாய்க்கும், கலர் காக்கட்டான் பூ 1,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகள் மற்றும் சந்தைகளிலும் கரும்பு, மஞ்சள், பானை உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. கரும்பு ஜோடி 60 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலும், மஞ்சள் பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. பானை அளவிற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மளிகை வியாபாரிகள் கூறியதாவது, ”ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெல்லமும், ஆந்திராவில் இருந்து பச்சரிசி, கேரளாவில் இருந்து ஏலக்காய், பண்ருட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து முந்திரி, உலர் திராட்சையும் விற்பனைக்கு வரும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த பொருட்களின் விற்பனை களைகட்டும். நடப்பாண்டு பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. தற்போது 20 முதல் 30 சதவீதம் விற்பனை நடந்து வருகிறது. ஒரு கிலோ வெல்லம் ₹45 முதல் ₹50 என்றும், பச்சரிசி கிலோ ₹35 முதல் ₹40 என்றும், முந்திரி ₹600 முதல் ₹700 என்றும், உலர் திராட்சை ₹250 முதல் ₹300 என்றும், பாசிப்பருப்பு ₹100 முதல் ₹120, நெய் ஒரு லிட்டர் ₹650 முதல் ₹800 கலர் கோலாமாவு ஒரு பாக்கெட் ₹4 முதல் ₹5, வெள்ளை கோலாமாவு கிலோ ₹10 என்றும் விற்பனை செய்யப்படுகிறது” என்றனர்