பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு பேருந்துகளில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த முறை ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை வருவதால், வெளியூரில் இருக்கும் பெரும்பாலானோர்  நீண்ட நாட்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும் வகையில் முன்கூட்டியே பயணத்திற்கு திட்டமிட்டுள்ளனர்.  அந்த வகையில் வியாழக்கிழமை (ஜனவரி 12) முதலே சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். 


பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், கடந்த வாரம்  தெற்கு ரயில்வேயால் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் தீர்ந்து போனது. இதனால் ரயிலில் பயணிக்க நினைத்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் சிறப்பு ரயில்களை அறிவிக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர். 






இதற்கிடையில் ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்ல வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தான் பொங்கல் பண்டிகைக்காக சில தினங்களுக்கு முன் தமிழக அரசு 16,932 சிறப்பு பேருந்துகளை அறிவித்தது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் ஜனவரி 12 ஆம் தேதி கூடுதலாக 2,751 பேருந்துகளும், 13 ஆம் தேதி கூடுதலாக 3,955 பேருந்துகளும், 14 ஆம் தேதி 4,043 பேருந்துகளும் என மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து 6, 183 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 


இதற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை வெளியூரில் இருந்து சொந்த ஊர் செல்ல 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13, 14 ஆம் ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பி விட்ட நிலையில், பகல் நேரத்தில் புறப்படும் பேருந்துகளில் ஒரு சில இருக்கைகளே உள்ளது. 


பேருந்துக்கான முன்பதிவுகளை நேரடியாகவோ அல்லது https://www.tnstc.in இணையதளம் வாயிலாகவோ செய்யலாம். அதேபோல் TNSTC Official App என்ற செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். இதேபோல் பேருந்து இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 9445014450, 9445014436 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.