பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளின் மூலம், கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் இருந்து மட்டும் 3 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். மேலும், ரயில்வே மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் கூடுதலாக 2 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பியிருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

  


நாளைய பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக 11,12,13 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கவும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி, மாநிலம் முழுவதும் பொது முடக்கநிலை அமல்படுத்த இருப்பதால், அன்று மட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     


Pongal Special Buses: பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் ... முழு விவரம்..  


கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் நோய் தொற்று அதிகரித்துள்ளதால், பேருந்துகளில் 75% பேர் மட்டுமே  பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் கட்டாய முகக்கவசம், வெப்பமாணி மூலம் பரிசோதனை, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசு செயல்படுத்தியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றிடமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.    



பயணிகளின் வசதிக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை:


மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24c7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வகுல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (Toll Free Number) தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Cantrol Room) 24 மணி நேரமும் செயல்படும். பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (No 1| Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மேற்கூறிய பேருந்து சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறும், மேலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கிடையே, பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக முதலமைச்சர் முன்னர் அறிவித்தார். இதன்மூலம், ஒரு லட்சத்து 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைவர் என்றும் தெரிவித்தார். 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 11,12,13 ஆகிய மூன்று நாட்களில் 10,468 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16,768 பேருந்துகள் இயக்கப்படுவதால், போக்குவரத்துக் கழகத்துக்கு அதிக வருவாய் கிடைக்கப்பெறும் என்றும் நம்பப்படுகிறது.