பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் கரும்பு, தேங்காய் வழங்கக்கோரி தமிழ்நாட்டின் பல இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு அதிகப்பட்சம் ரூ.2,500 வரை பணம் கொடுக்கப்பட்டு, கரும்பு,பச்சரிசி உட்பட பொங்கல் பொருட்களும் வழங்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதன் பிறகு இந்த ஆண்டு பொங்கலுக்கு பணம் எதுவும் வழங்கப்படாததுடன் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், உள்ளிட்ட 21 பொருள்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றன.
இதில் பல பொருட்கள் தரமில்லாததாக இருந்ததாக புகார் எழுந்த நிலையில், பொங்கல் சிறப்புத் தொகுப்பை விநியோகித்த சில நிறுவனங்களை கருப்புப் பட்டியலுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கவும் கடந்த சில நாள்களுக்கு முன் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், போகி பண்டிகைக்கு முன்பு அனைத்து குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ரூ.2,357 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி 2 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் இதற்கான டோக்கன்கள் வீடு, வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, தேங்காய் வழங்கக்கோரி தமிழ்நாட்டின் பல இடங்களில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், மதுரை, திருச்சி,நாகர்கோவில், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தேங்காய், கரும்புகளை கைகளில் ஏந்தியபடி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம் பெறாததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
பொங்கல் பரிசு பெறுவது எப்படி?
ரேஷன் கடைகளில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, பயனாளர்களின் குடும்பத்தில் ஒருவரது கைவிரல் ரேகை பதிவு அவசியம். அதேபோல பொங்கல் பண்டிகைக்கான பச்சரிசி மற்றும் சர்க்கரை பெறவும் ஸ்மார்ட் கார்ட்டுடன், கைரேகையும் பதிவு செய்ய வேண்டும். ரூ.1000 ரொக்கம் பெறவும் கைரேகைப் பதிவு முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவரின் கைரேகைப் பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு கிடைக்கும். பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.