தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தமிழக அரசின் சார்பில் ரூபாய் 1000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.


இதற்காக புத்தாண்டு தொடக்கத்தில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டது.


பொங்கல் பரிசுத்தொகுப்பு


இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது,


“ மொத்தம் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 குடும்ப அட்டைதாரர்களில் 2 கோடியே 12 லட்சத்து 82 ஆயிரத்து 791 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 97 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பரிசுத்தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது.




6 லட்சம்


திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் 99 சதவீதமும், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தர்மபுரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் 98 சதவீதமும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மிக குறைந்தபட்சமாக தென்சென்னையில் 94 சதவீதம் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் இன்னும் 6 லட்சத்து 3 ஆயிரத்து 322 பேருக்கு மட்டுமே பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர் சென்ற காரணத்தால் பரிசுத்தொகுப்பை வழங்க முடியவில்லை.  பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசி, கரும்பு ஆகியவை நல்ல தரமானதாக இருந்ததாக அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர். குறிப்பாக, பச்சரிசி எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் தரமானதாக இருந்ததாக பாராட்டுகள் குவிகின்றன.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கடந்தாண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசி, வெல்லம் தரமற்றதாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நடப்பாண்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் எந்தவொரு விமர்சனங்களும் எழாத வகையில் பரிசுப்பொருட்களை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மக்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பை கடந்த 9-ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.