தமிழர்களின் அடையாளமான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே செங்கரும்பு, தித்திக்கும் பொங்கல், ஊர் திருவிழா ஆகியவற்றுடன் எப்போதும் நீங்காமல் நமது நினைவில் இருப்பது ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆகும்.
ஜல்லிக்கட்டு
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தினாலும் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு என்று தனிச்சிறப்புகள் உள்ளது. மதுரையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்போதும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தை முதல் நாளில் அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் தினத்தில் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சீறும், சிறப்புமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில், மிகவும் பிரசித்தி பெற்ற உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற உள்ளது. மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு என்று தனிச்சிறப்பு உண்டு.
உதயநிதி ஸ்டாலின்
இந்த புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமாகிய உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் தொடங்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை வந்தடைந்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காகவும், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளதால் அலங்காநல்லூர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக வாடிவாசல், பார்வையாளர்கள் மேடை, பரிசுப்பொருள் மாடம், வி.ஐ.பி. கேலரி ஆகியன சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகளும், சுமார் 300 காளையர்களும் களமிறங்க உள்ளனர்.
பரிசுகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு காரும், யாருக்கும் பிடி கொடுக்காமல் முதலிடம் பிடிக்கும் காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், பாத்திரங்கள், பீரோ, கட்டில், இரு சக்கர வாகனங்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது. முன்னதாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பாவான மு.க.அழகிரியை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஒரு நபர் அவனியாபுரம், பாலமேடு அல்லது அலங்காநல்லூர் ஆகிய மூன்று பகுதிகளில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற புதிய விதி பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.