கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்பாட்டில் ஆயுதப்படை மைதானத்தில் அனைத்து காவலர்களும் ஒன்று கூடி தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர். ஆட்டம், பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் வண்ண உடை அணிந்து காவலர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது


 


 




உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு நிதி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் காவல் துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சமத்துவ பொங்கல் வைத்து சமத்துவத்தை போற்றி வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக பிரம்மாண்ட பொங்கல்  விழா மற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் ஏற்பாட்டில் தான்தோன்றி மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைத்து நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது.


 


 




முதலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் மைதானத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கிராமத்துக் குடில் அமைக்கப்பட்டு அதில் கிணறு, மாடுகள் கட்டும் இடம், ஆடுகள் கட்டும் இடம், கோழிகள் தங்குமிடம் போன்ற கிராமத்து மண் மனம் மணக்க அங்கு பொங்கல் வைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக அனைத்து பெண் காவலர்களும் காவல் நிலைய சார்பாக தனித்தனியாக 15க்கு மேற்பட்ட பொங்கல் பானையுடன் பொங்கலை வைத்து சிறப்பித்தனர். ஆண், பெண் காவலர்களுக்கென கயிறு இழுக்கும்போட்டி,  பானை உடைக்கும் போட்டி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.


 


 




 


அதன் தொடர்ச்சியாக பரதநாட்டியம், குச்சிப்புடி நடனம், முருகன் பாடல் என தொடர்ந்து சினிமா பாடல் வரை விழா மேடையில் சிறப்பாக நடைபெற்றது. மாலை 5 மணிக்கு துவங்கப்பட்ட பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டி இரவு 10 மணி வரை இடைவிடாது பல்வேறு நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் திருச்சி சரக ஐஜி கார்த்திகேயன், திருச்சி டிஐஜி மனோகர் மற்றும் கரூர் மாவட்ட தலைமை நீதிபதிகள் சண்முகசுந்தரம், சுஜிதா மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், திரைப்பட தெம்மாங்கு பாடகர் சின்னப்பொண்ணு உள்ளிட்ட திரை பிரபலங்களும் வருகை புரிந்து கரூர் மாவட்ட காவல்துறை பொங்கல் விளையாட்டு விழா மற்றும் பொங்கல் விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில்  கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலைய காவலர்கள் வண்ணை உடை அணிந்து பொங்கல் திருநாளில் பொங்கல் வைத்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக பிரம்மாண்ட பொங்கல் விழா சிறப்பாக ஆட்டம், பாட்டத்துடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.