ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டிலான் வாக்குச்சாவடியில் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் காயம் அடைந்தனர். முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கண்டிலான் வாக்குச்சாவடி பூத் எண் 219-ல் இன்று காலை முதல் கண்டிலான் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்தனர் . 


கண்டிலான் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்குள்ள சமுதாயம் என்று இரண்டு இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அந்த பெய்த கனமழையால் பூத் எண் 219 ல்  மேற்கூரை இடிந்து சேதம் அடைந்தது. அப்போது வாக்களிப்பதற்காக காத்திருந்த புவனேஸ்வரி, முனியசாமி, பூமி கிருஷ்ணன், தாமோதரன், மற்றும் முருகன் ஆகிய ஐந்து பேருக்கும் காயம் ஏற்பட்டது.




சம்பவ இடத்திற்கு முதுகுளத்தூர் வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்தார். தற்போது இடிந்து விழுந்த மேற்கூரைகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என வாக்களிக்க வரும் பொது மக்கள் அச்சப்படுகின்றனர். காயம் பட்ட 5 பேரும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.


கண்டிலான் கிராமத்தில் 626 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.