சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்திற்கு மலர் தூவியும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் மரியாதை செலுத்தினர்.
தீரன் சின்னமலை
ஈரோடு மாவட்டத்தில் காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்தவர் தீரன் சின்னமலை. இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, மல்யுத்தம் சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்று கைத்தேர்ந்தவராக மாறினார். மற்றவர்களுக்கும் அந்த கலையை கற்றுக் கொடுத்து ஒரு படையை உருவாக்கினார். அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தார்.மூன்று மைசூர் போர்களிலும் திப்பு சுல்தான் - தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்து.
தீரன் சின்னமலையை ஆங்கிலேயர்கள் அவரது சமையல்காரன் நல்லப்பன் மூலமாக சூழ்ச்சி செய்து கைது செய்து தூக்கிலிட்டனர். சங்ககிரிக் கோட்டையில் ஆடிப்பெருக்கு அன்று 1805 ஜூலை 31 ஆம் தேதி தூக்கிலிட்டனர். தமிழ்நாடு அரசால் சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலைக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தீரன் சின்னமலையின் 218 வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை
இதனை முன்னிட்டு, “சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, கயல்விழி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தினார். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் தீரன் சின்னமலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தீரன் சின்னமலை பெயர் காரணம்
தீர்த்தகிரி கவுண்டரின் பிறப்பிடமான கொங்குநாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்தது. அப்போது அந்நாட்டின் வரிப்பணம் அவரது பக்கத்து நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். ஒருநாள் நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி அப்பணத்தைப் பிடுங்கி ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் சொல்" என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல் அவர் தீரன் சின்னமலை என்று அழைக்கப்படுகிறது.