தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலையம் அருகே  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் உள்ளிட்டவர்களை நாம் தமிழர் பேச்சாளர்கள் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. 


நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருந்தபோது மேடையின் மீது ஏறிய திமுக நிர்வாகி செங்கண்ணன் மரியாதையாக பேசவேண்டும் என்று கூறினார். உடனடியாக வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மேடை மீது ஏறி செங்கண்ணனை தடுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே மேடையில் இருந்த மைக்கை பிடிங்கி எறிந்ததோடு, சேரை தூக்கி எறிந்து திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஆர்ப்பாட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.


கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுகவினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம். வடமாநிலங்களில் பாஜக செய்யும் அதேவகையிலான வன்முறையையும், ஜனநாயகத்திற்கு எதிரானக் கொடுங்கோல் போக்கையும் ஏவிவிடும் திமுகவினரின் செயல் இழிவானது. அதிகாரத்திமிரிலும், ஆட்சி தந்த மமதையாலும் காவல்துறையைக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது. தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருந்தார்.




இதனையடுத்து, இத்தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அவதூறு பேசியதை எதிர்த்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த திமுகவினர் கூறுகின்றனர். என்றாலும்கூட கருத்துக்கு கருத்துதான் எடுத்து வைக்கப்படவேண்டும். வன்முறைகள் கூடாது இந்த சம்பவத்தில் திமுக தலைமைக்கு உடன்பாடு இருக்காது என்று நம்புகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு, நாம் தமிழர் கட்சியின் மேடையில் அத்துமீறி ஏறி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றிய திமுக வன்முறைக்கும்பலின் அட்டூழியத்தைக் கண்டித்து நியாயத்தின் பக்கம் நிற்கும் விசிக தலைவர், அண்ணன் முனைவர் திருமாவளவன் அவர்களுக்கு நன்றி என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார்



.


முன்னதாக, எதிர்கட்சித்தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தற்போது ஒரு நூதனமான ஆட்சி தீய சக்திகளால் நடத்தப்பட்டு வருகிறது என்பதற்கு பல்வேறு சம்பவங்களை எனது அறிக்கைகளின் வாயிலாக அவ்வபோது சுட்டிக்காட்டி வருகிறேன். மொரப்பூரில் நாம் தமிழர்கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேச்சாளரை மேடையிலேயே கடுமையாக தாக்கியுள்ளனர். ஜனநாயக முறையில் நடைபெற்ற அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டத்தில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். 


தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினரைத் தடுக்காமல் காவல் துறை கைகளை கட்டியபடி வேடிக்கைப்பார்த்தது ஜனநாயகப்படுகொலையாகும். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக முறையில் செயல்பட அனுமதிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்காக போராட்டங்களுக்க்கு அனுமதி அளிக்கப்பட்டது அப்போதெல்லாம் எங்கள் அரசை நாராச நடையில் விமர்சித்தவர்கள் திமுகவினர்.


ஆளும் கட்சியினர் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி எதிர்க்கட்சிகள் சமூக செயல்பாட்டாளர்கள் மக்கள் நலன் விரும்பிகள் சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் குரல் வளையை நெறிக்கிறார்கள். கடந்த ஆட்சியில் இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதலிடம் வகித்த காவல்துறை இந்த விடியா அரசில் ஆளும் கட்சியினரின் கைப்பாவையாக செயல்பட்டுவருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என கூறியிருந்தார்.


ஆர்ப்பாட்டத்தில், அத்துமீறி நுழைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், அதிகாரத்திமிரில் ஜனநாயக மரபுகளைக் குழிதோண்டிப் புதைத்து ஆணவத்தோடு செயல்படும் திமுகவினரின் அட்டூழியத்தைக் கண்டித்துமென அறிக்கை வெளியிட்ட  சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என்று சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.




அவரைத் தொடர்ந்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர்  நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சகிப்புத் தன்மையும், கருத்துரிமையை மதிப்பதும் தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அதை மீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். விமர்சனங்களுக்கு வன்முறைகளால் பதிலடி தரத் தொடங்கினால் தமிழகம் அரசியல் களமாக இருக்காது.... வன்முறைக்களமாக மாறிவிடும். அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் அனைவரும் தடுக்க வேண்டும் என்று தனது பதிவில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.




இன்று அமமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன்,  நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கருணாநிதி தம்பி கொடியோடு வா என்றால் தடியோடு வா என்று அர்த்தம் என்று எல்லோருக்கும் தெரியும்; ஒரு அரசியல் இயக்கம் எப்படி செயல்படக்கூடாதோ அப்படி செயல்படுவார்கள்; ஆனால் வெளியில் மிகவும் நாகரிகமாகக் காட்டிக்கொள்வார்கள்; பழைய குருடி கதவ தொறடி என்பது போன்று திமுகவின் சுய ரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கின்றது. நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் இதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று  விமர்சித்துள்ளார்.


அரசியலில் எதிரும் புதிருமாக உள்ள அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் நாம் தமிழர் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஒரே குரலாக ஒலித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.