ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்ப இன்று தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடியது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர்  ஆளுநரின் செயலுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.


இந்த தனித் தீர்மானத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்று சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரில்  உரையாற்றினர்.


வேல்முருகன் உரை:


 தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ”ஆளுநர் சட்டத்திற்கு உடனடியாக கையெழுத்திடவே ஆளுநராக இருந்து வருகிறார். ஆனால், அவற்றை செய்ய அவர் தவறும் போது, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் இன்று சட்டப்பேரவை கூறியுள்ளது. மீண்டும் அனுப்பவுள்ள சட்ட முன்வடிவை, நியாயமான முறையில் முதல்வர் கொண்டு வந்துள்ளார். முதல்வர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன்.


ஆளுநருக்கு கடும் கண்டனங்கள். ஆளுநர் பொறுப்பிற்கு வந்ததிலிருந்தே அவரது நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானதாகவே இருந்து வருகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டங்களை குப்பையில் போடுவது போல் தூக்கி வீசிவிட்டு அமைதி காக்கிறார் ஆளுநர்.


தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா என்றாலே ஆளுநருக்கு கசக்கிறது. தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. 10 சட்ட மசோதாக்களையும் வரவேற்கிறேன்” என்று கூறி உரையை முடித்தார்.


கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன்:


கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் பேசுகையில், “நமது மாநில ஆளுநருக்கு எதிராக நாம் உச்ச நீதிமன்றத்தை நாடும் அவசியம் ஏற்பட்டுள்ளது. எய்தவர்கள் அமைதியக வேடிக்கை பார்க்க, அம்பு -எய்தவர்கள் சொன்னதை விட அதிகமாக குதிக்கிறது. என்றாவது ஒருநாள் ஆளுநர் அதிகாரிகளை அழைத்து தமிழக வளர்ச்சிக்காக பேசியது உண்டா.? அரசின் செயல்பாட்டை முடக்கும் வகையில்தான் செயல்பட்டு வருகிறார்.-


ஆளுநருக்கு எதிரான போராட்டம் என்பது இன்று நேற்றல்ல, அண்ணா காலத்திலேயே தொடங்கிய 60 ஆண்டுகால போராட்டமாக இருந்து வருகிறது. ஆளுநர் பதவி மக்களாட்சிக்கு கேடானது என அண்ணா சொன்னார்,  இன்றைய முதல்வர் ஆட்சி மூலம் இதற்கு முடிவு ஏற்பட வேண்டும்.


கோட்டையில் முதலமைச்சர்கள் கொடியேற்ற இந்தியாவிற்கு அனுமதி வாங்கி தந்ததை போல ஆளுநர் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் ஆளுநர்கள் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்  தவறினால், அது இந்தியா முழுவதும் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகை செய்யும் வகையில் அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.


ஜவாஹிருல்லா பேச்சு:


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “ஆளுநர் இந்த மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக திருப்பி அனுப்பி உள்ளார் . இந்த மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி திருப்பி அனுப்பமனித நேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன்.


ஆளுநர்கள் இப்படி செயல்படுவது மனசாட்சி விரோதமானது ஜன நாயகத்திற்கு எதிரானது என்று முதலமைச்சர் சொன்னார். தமிழர்கள் நெஞ்சம் எல்லாம் கொதிக்கிறது. 1942 விடுதலை போராட்டம் போது அமெரிக்கன் கல்லூரியில் படித்த போது தேர்வை ஒதுக்கி விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டவர் சங்கரய்யா. மதுரை காமராஜர் பல்கலைகழகம் முனைவர் பட்டம் வழங்க முன் வந்தது அவருக்கு முனைவர் பட்டம் அளிக்க மாட்டேன் என்று ஆளுநர் சொன்னால் அது சர்வாதிகாரம் என்று சொல்லாமல் எப்படி சொல்வது. அமைச்சரவை ஆலோசனை அடிப்படையில்தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உள்ளது.


அமைச்சரவை ஆலோசனை அடிப்படையில் மட்டும் தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதை என்று 1974 இல் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. ஆளுநருக்கு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று அம்பேத்கர் தெளிவாக விளக்கம் அளித்து உள்ளார்” என தெரிவித்துள்ளார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - டி ராமச்சந்திரன் பேச்சு:


”ஏழைரை கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது சட்டமன்றம் எனவும், சட்டமன்றம் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாக்களை பல மாதங்களாக ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.  தொடர்ந்து ஆளுநர் மாநில அரசோடு மோதல் போக்கை கடைபிடிக்கிறார். ஆளுநர் சிறுபிள்ளைத் தனமாக பொதுவெளியில் பேசிக் கொண்டிருக்கிறார்.


ஆளுநர் தமிழ் மொழி, கலை, பண்பாடு, கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் அலுவலகமாக மாற்றி சனாதான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குடியரசு தலைவர் ஆளுநரை திரும்ப பெற வேண்டும்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இன்று காலை சபாநாயகரிடம் வழங்கியிருக்கிறோம்” என குறிப்பிட்டு பேசினார்.


(சிறுபிள்ளைத்தனமான ஆளுநர் பேசுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் பேசியதற்கு பாஜக நைனார் நகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தனர் அதனை தொடர்ந்து சிறுபிள்ளைத்தனம் என்ற வார்த்தையை நீக்கி குழந்தைத்தனமாக என்ற வார்த்தையை சேர்த்து பேசினார்).


நாகை மாலி  பேச்சு:


” தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதியின் கீழ் முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆதரிக்கிறேன். இந்த மசோதாவில் கையாண்டு உள்ள சொற்கள் யாரையும் புண்படுத்தாமல் ஒரு தீர்மானம் கொண்டு வர முடியும் என்றால் அது முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானம் தான்.


நேரம் காலம் பார்க்க வேண்டும் பேச வேண்டிய கருத்துகளை பேச வேண்டும் என்று அவை முன்னவரை கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் சில கருத்துகளை பதிவு செய்ய உள்ளோம்.


மக்களால் ஜனநாயக பூர்வமாக தேர்வு செய்யப்பட்ட,  7 கோடி மக்களின் மனசாக செயல்படும் அரசு நம் அரசு, சகல ஜனநாயக மான்புகளையும் புறம் தள்ளி செயல்படும் நம் தமிழக ஆளுநர் போல் எந்த ஆளுநரும் இல்லை.


எந்த அரசியல் அதிகாரமும் இல்லாத ஆளுநர் அதிகாரத்தை கையில் எடுப்பேன் என்று செயல்படும் ஆளுநருக்கு என் இறுதி எச்சரிக்கை இது. தோழர் சங்கரய்யா சுதந்திரத்துக்காக சிறை வாழ்வு தலைமறைவு வாழ்வு வாழ்ந்தவர். சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம் வழங்குவதில் ஆளுநராக இல்லாமல் பாஜக ஆளாக செயல்பட்டு அதனை செயல்படுத்தவில்லை” என பேசியுள்ளார்.