தமிழ்நாடு அரசின் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனின் மகன் மற்றும் பேரன் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்கில் ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெய்டு, தி மார்வல்ஸ் ஆகிய 4 படங்கள் நேற்று தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தைப் பார்க்க சென்னை தி.நகர் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றிற்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் ஆகியோர் படம் பார்க்க சென்றுள்ளனர்.
அப்போது தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தப்போது பின்வரிசையில் அமர்ந்திருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் விசில் அடித்து, அதிக சத்தம் போட்டு கூச்சலிட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அமைச்சரின் பேரன் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் அந்த கும்பல் தாக்கியதில் அமைச்சரின் மகன் ரமேஷ் மற்றும் பேரனுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சரின் மகன் ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தியேட்டரில் அமைச்சர் மகன் மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.