மகாத்மாகாந்தியடிகளின் 77வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அதனைப் பற்றி காணலாம்.


முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்லிணக்க உறுதிமொழியை வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். அதேபோல் தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 


மேலும் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கார், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பலரும்  காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.






ராகுல் காந்தி


இந்த நாளில், வெறுப்பு மற்றும் வன்முறையின் சித்தாந்தம் அவர்களின் மரியாதைக்குரிய பாபுவை (காந்தியடிகள்) நாட்டிலிருந்து பறித்தது. இன்று அதே சிந்தனை அவர்களின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் நம்மிடமிருந்து பறிக்க விரும்புகிறது. ஆனால் இந்த வெறுப்புப் புயலில், உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக்கூடாது. இதுவே காந்திஜிக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


மத்திய இணையமைச்சர் எல்.முருகன்


தேசத்தின் சுதந்திரத்துக்காக அமைதியான அகிம்சை முறையில் போராடியவர்; சுதந்திரத்துக்காக பெரும் பங்காற்றி “தேசப்பிதா” என்றழைக்கப்பட்ட, “மகாத்மா காந்தி ஜி” அவர்களின் நினைவு தினமான இன்று, தேசத்திற்காக அவர் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து போற்றுவோம்! என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 


கமல்ஹாசன் 


"தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு. ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக" என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கூறியுள்ளார்.