தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியின் மூன்றாம் கட்டமானது, 2023 ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி (நாளை மறுநாள்) தமிழ்நாட்டில் வழங்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.


சுற்றறிக்கை


இதன்படி, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "சுகாதார திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான தடுப்பூசியானது, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கும், 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்தானது 2 கட்டங்களாக வழங்கப்படுகிறது. முதலில், பிறந்த 6 வாரங்களுக்குப் பிறகு மற்றும் இரண்டாவது, 14 வாரங்களுக்குப் பிறகு வழங்கப்படுகிறது.


முன்னெச்சரிக்கை


இது தவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு போலியோவை ஒழித்திருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 4 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட போலியோ தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. எனவே, தேவையான அனைத்து ஆயத்த பணிகளையும் தொடங்கும் வகையில் மாவட்ட சுகாதார அதிகாரிகள் எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.