தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 297 நபர்கள் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இன்று மாலை சென்னையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுளளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.




இந்த நிலையில்,  தமிழக காவல்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ”கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்களை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும், கொரோனா பரவாமல் இருக்க முககவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் இதர அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10-ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் கடந்த நான்கு நாட்களாக ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வந்துள்ளனர். இந்த அறிவுரைகளை பொதுமக்கள் சிலர் சரியாகவும், ஒழுங்காகவும் பின்பற்றாததால் கொடிய தொற்று மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.




நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தமிழக அரசின் அறிவுரைகளை பின்பற்றி, கொரோனா தீவிரமாக பரவி வரும் இந்த காலத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதில் இருந்து பொதுமக்கள் தங்களை தவிர்த்து கொள்ளும்படி தமிழக காவல்துறை கேட்டுக்கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது