ஹெல்மெட் போடாத போலீசார் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்ற வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணனின் அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் போட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்தாலும் சில பொதுமக்கள் இதனை சரிவர கடைபிடிப்பதில்லை. சமீபத்தில் கூட சென்னையில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை மீறுவோர் மீது ஆங்காங்கே போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் சிலர் ஹெல்மெட் உட்பட சாலை விதிகளை மதிப்பதில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அவ்வாறு கண்டறியப்படுபவர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு வேலூரில் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது காட்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்வதை பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ்காரருக்கு எஸ்.பி. உத்தரவுப்படி அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் ஹெல்மெட் அணியாமல் இருப்பது, வண்டியில் பல்வேறு டிசைன்களில் பதிவெண் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும், பொதுமக்களுக்கு போலீசார் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த உத்தரவுக்கு அம்மாவட்ட பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்