கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சின்ன தாராபுரம் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் சார்பில் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் ஆடி பாடி கொண்டாடினர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சின்ன தாராபுரம் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் சார்பில் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி சின்னதாராபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற 64 ஆவது பவளக்கொடி கும்மி ஆட்டக் குழுவினரின் அரங்கேற்ற விழாவில் அப்பகுதி பொதுமக்கள் விநாயகர் வழிபாட்டை தொடங்கி, கோவிலில் இருந்து மேல தாளங்களுடன் ஊர்வலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முளைப்பாரியை எடுத்து வந்தனர். தொடர்ந்து மூத்த கடவுள் விநாயகர்க்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பவளக்கொடி கும்மியாட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அம்மன் கே விஸ்வநாதன் தலைமையில் 64வது அரங்கேற்ற நிகழ்ச்சி தொடங்கியது. குறிப்பாக ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் திருப்பூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், கரூர் மாவட்டத்திலிருந்து சுமார் 1000-க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பச்சை வண்ணத்திலான பாரம்பரிய உடையணிந்து பாரம்பரியமான உருமி இசைக்கு ஏற்றவாறு விநாயகர், முருகன், கருப்பண்ணசாமி, அம்மன், நாட்டுப்புற, பக்தி பாடல்களுடன் ஆடிய பவளக்கொடி கும்மி ஆட்டத்தை பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் திரளான கலந்து கொண்டு கும்மியாட்டத்தை கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ஒருங்கிணைப்பாளர் அம்மன் விஸ்வநாதன், அருணாச்சலம் ஆகியோரும், பயிற்சி ஆசிரியராக வெள்ளகோவில் சித்ரா சிறப்பான முறையில் பயிற்சிகளை வழங்கினர்.
இது குறித்து பயிற்சியாளர் அம்மன் விஸ்வநாதன் கூறுகையில், “தமிழ் மண்ணிற்கே உரித்தான பாரம்பரிய கலையாக கும்மி ஆட்டம் திகழ்ந்து வருகிறது. சமீப காலமாக டிவி,சினிமா போன்ற மோகங்களினால் மறைய தொடங்கியது சிறப்பு மிக்க இந்த கலையை அழிவில் விளிம்பில் இருந்து மீட்டெடுத்து அதனை இளைய தலைமுறைகளுக்கு கொண்டு சென்று வருகிறோம். கும்மி கலையின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் உடலுக்கு நல்லதொரு பயிற்சியாகவும் ஆரோக்கியமாகவும் அமைந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியை பள்ளி, கல்லூரிகளிலும் கொண்டு போய் சேர்க்க ஆவணம் செய்ய வேண்டும்” என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பெண்மணி கூறுகையில், ”தமிழகம் முழுவதும் தற்பொழுது வரை 64 குழுக்களுக்கு தாங்கள் பயிற்சி எடுத்து வருகிறோம். 500-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளோம். வருங்கால தலைமுறைகளுக்கு கலை, நடனம், இசை மூலமாக விரைவில் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும். அடுத்த தலைமுறைக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் எளிதாக சென்று சேர்க்க முடிகிறது” என்று கூறினார்.