அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஓசூரில் தமிழக - கர்நாடகா - ஆந்திரா ஆகிய மூன்று மாநில எல்லைப்பகுதியில் போலீஸ் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பரபரக்கும் தேர்தல் களம்:
கர்நாடகா ஆந்திரா ஆகிய இருமாநில எல்லையாக கொண்ட சிறப்பை கொண்டது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம். கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர் புறநகர், கோலார் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், ராம் குப்பம் ஆகியவை கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டிய அண்டை மாநில மாவட்டங்களாக உள்ளது.
கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தான் அண்டை மாநிலங்களுக்கு சென்று வர வேண்டும் என்கிற நிலையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதையொட்டி ஒசூர் தனியார் ஓட்டலில் சேலம் சரக டிஐஜி உமா அவர்களின் தலைமையில் தமிழக - ஆந்திரா - கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லை ஒருங்கிணைப்பு போலிசாரின் காவல் உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை, "நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அண்டை மாநிலங்களான கர்நாடக, ஆந்திரா மாநிலங்களின் எல்லையோர போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
போலிஸ் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை:
கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மது, பரிசு பொருட்கள் கடத்தல் பணம் கொண்டு செல்வதை தடுப்பது. குற்ற சம்பவங்கள், சதி திட்டங்களை கூட்டாக தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது" என்றார்.
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருப்பது தமிழ்நாடு. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு மட்டும் இன்றி அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவிலும் கணிசமான தொகுதிகள் உள்ளன.
கேரளாவில் 20 மக்களவை தொகுதிகளும் கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகளும் உள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளே ஆட்சியில் உள்ளன. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியும் நடந்து வருகிறது.
தென் மாநிலங்களில் பலவீனமாக இருக்கும் பாஜக, வரும் தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற முயற்சித்து வருகிறது.
இதையும் படிக்க: Cotton Candy Ban: இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை - அதிரடியாக அறிவித்த தமிழ்நாடு அரசு