விழுப்புரம்: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் 17.02.2024 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இராமசாமி தலைமையில் நடைபெற்றது. தீர்மானங்களை முன்மொழிந்து, வழிமொழிந்த பின் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.


தீர்மானங்களில் கூறியிருப்பதாவது


புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், 21 மாத ஊதிய நிலுவையினை வழங்க வேண்டும் எனவும், கொரோனா காலத்தில் முந்தைய அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நிதிபலன்களை திரும்ப வழங்க வேண்டும் எனவும் பதிவறை எழுத்தர் பதவியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவோர். அலுவலக உதவியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் ஆகியோர்களுக்கு தகுதியின் அடிப்படையில் விதிகளை தளர்வு செய்து பதவி உயர்வு வழங்க வேண்டுமெனவும்,


மேலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சுருக்கெழுத்து தட்டச்சர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கும் பல ஆண்டுகளாக இளநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர்களுக்கும் விதிகளில் தளர்வு செய்து பதவி உயர்வு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டது. பால் தணிக்கை துறை மற்றும் வீட்டு வசதித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை உடனடியாக தாய்த்துறைக்கு பணிவிடுவிக்க வேண்டும்.


இணைப்பதிவாளர்கள் மற்றும் துணைப்பதிவாளர்கள் மேலாண்மை இயக்குநராக பணியாற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக கூட்டுறவு சட்டம் பிரிவு 81 மற்றும் 82 ஆகியவற்றின் விசாரணை மற்றும் ஆய்வு பணிகளை கூட்டுறவு சார்பதிவாளர் பணி நிலையில் மேற்கொள்வதில் பலவித பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அப்பணிகளை கூடுதல் பதிவாளர் தலைமையில் கோருவது எனவும் கூட்டுறவு சங்க தேர்தல் மற்றும் பொதுப்பணி நிலைத்திறன் குழு ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்.


களஅலுவலர்களுக்கு வட்டார தலைநகரங்களில் அலுவலகம், மடிக்கணினி வசதி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடம் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் 01.10.2023ம் தேதிய துணைப்பதிவாளர் பதவி உயர்வினை விரைந்து வழங்க வேண்டும், வெளியூரிலிருந்து அலுவல் நிமித்தமாக சென்னை வரும் சார்நிலை அலுவலர்கள் காலை நேரத்தில், புத்துணர்வு பெற அறை வசதி துறை சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.