சென்னை மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப்பணி தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த 13 நாட்களாக நடந்து வரும் போராட்டத்திற்கு சமூக அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் நாதக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  தவெக போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அண்மையில் தவெக தலைவர் விஜய் தூய்மைப்பணியாளர்களை சந்தித்து அவர்களது கோரிக்கையை கேட்டறிந்தார். அதேபோன்று விசிக தலைவர் திருமாவளவன் தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கையை முதல்வரிடம் எடுத்துரைப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும் தூய்மைப்பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்ட்ம நடத்துவதை ஏற்க முடியாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தேன்மொழி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

அதனடிப்படையில் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும் தூய்மைப்பணியாளர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. களையவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து தூய்மைப்பணியாளர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். சென்னை மாநகராட்சியிடம் தான் எங்களது கோரிக்கைகளை முறையிட முடியும். வேறு ஒரு இடத்தில் போராட முடியாது என தூய்மைப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.