திமுகவில் இணைந்த மைத்ரேயன்
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் இன்று திமுகவில் இணைந்தார். தமிழக அரசியலில் பாஜக, அதிமுக , பாஜக என கட்சிகள் மாறியவர் மைத்ரேயன். இவர் 1990 - களில் பாஜவில் இணைந்தார். அந்த கட்சியில் மாநில அளவில் முக்கிய பொறுப்புகளை வகித்த மைத்ரேயன் 2000 - ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
2002 - ம் ஆண்டு முதல் 2019 - ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பழனிசாமி - பன்னீர் செல்வம் அணிகள் இடையே மோதல் ஏற்பட்டபோது , பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மைத்ரேயன் 2022 - ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து மீண்டும் பாஜவில் இணைந்த அவர் அந்த கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் அதிமுகவில் கடந்தாண்டு இணைந்தார். அவருக்கு அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியை இபிஎஸ் வழங்கினார். இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
பின்பு , அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மைத்திரேயன் ;
மண் மொழி மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற முதலமைச்சர் ஆணைக்கு இணங்க இன்று திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன். முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு பொருளாதாரம் உட்பட அனைத்திலும் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
களத்தில் முதலமைச்சர் நிற்பதால் தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சர் உடன் நிற்கிறார்கள். அதிமுகவின் போக்கு சரியாக இல்லை , எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியை அறிவித்துள்ளார். ஆனால் அந்த கூட்டணியை அறிவித்ததே அமித்ஷா தான்.
அதிமுக - பாஜக கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை
ஒரு சிலர் திட்டமிட்டு அதிமுகவை அவர்கள் கைகளில் வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். அதிமுகவில் என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதிமுக பாஜக கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை. தொடர்ந்து கட்சி மாறுகிறேன் என்று என்னை பார்த்து சொல்வது தவறான ஒன்று. ஒரு இயக்கத்தில் பயணிக்கும் போது அந்த இயக்கத்துக்காக பணியாற்றியுள்ளேன்.மாற்றம் ஒன்று தான் மாறாதது அடுத்த இலக்கை நோக்கி செல்கிறேன். எடப்பாடி பழனிசாமி தன்னை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்று நினைத்துக் கொள்கிறார். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.