சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 417, 376, 313, 323, 506(I), 67A ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் முன்னாள் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். அதே நேரம் நாடோடிகள் படத்தின் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகை சாந்தினி. இவர் திடீரென மே 28-ஆம் தேதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, ஐந்து ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும், மேலும் இந்த காலகட்டத்தில் தான் 3 முறை கருவுற்று, அதை கலைத்ததாகவும் பகீர் புகாரை அளித்தார். இதனால் தன் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து மணிகண்டனிடம் கேட்டபோது, தனக்கு நடிகை சாந்தினியை தெரியாது என ஒரே அடியாக மறுத்துவிட்டார். மேலும் நான் இந்த புகாரை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில்தான் நடிகை சாந்தினி கொலை மிரட்டல் விடுத்து வரும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளித்த புகாரில் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் விரைவில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.