கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது பெண் போலீஸ் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு வீர தமிழர் பண்பாட்டு கழகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தேவராட்டம் நடத்துவதற்கும், பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த போலீசார் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் ஏராளமான இளைஞர்கள் அனுமதியை மீறி ஜவகர் பஜார் பகுதியில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், அதிக ஒலி எழுப்பிக் கொண்டு அதிவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஊர்வலம் நடத்த தடை விதித்தனர். மேலும் பெண் போலீஸ் எஸ்ஐ பானுமதி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களின் வண்டியில் இருந்து சாவியை எடுத்துள்ளார். இதில் கோபம் அடைந்த இளைஞர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அதன் விளைவாக போலீசார் வேறு வழியின்றி கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் இருந்த நபர்கள் நாளா புறமும் சிதறி அடித்து தலை தெரிக்க ஓடினர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக கரூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.