திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மருத்துவமனைக்கு வர மறுத்த மகளை, தலையில் கல்லைப்போட்டு கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், அலகரை ஊராட்சிக்கு உட்பட்ட அரியனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ் (வயது 43) மற்றும் மஞ்சுளா (வயது 35). சந்திரபோஸ் சென்னையில் இருக்கும் ஹோட்டாலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். அதே சமயம் மஞ்சுளா ஊர் காவல்படையில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு ஹேமேஷ் என்ற 8 வயது மகன் இருக்கிறார், இவர் அரியனாம்பேட்டை தொடக்க பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், மஞ்சுளாவிற்கு சிறிது மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஊர் காவல்படைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் கடந்த ஒரு மாத காலமாக லால்குடியில் உள்ள தாலக்குடி பகுதியில் இருக்கும் அவரது அம்மா அன்னக்கிளி வீட்டில் தங்கியிருந்துள்ளார். அங்கு தங்கியிருந்து திருச்சியில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து கடந்த வாரம் மஞ்சுளா தனது தாய் அன்னக்கிளி வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக அரியனாம்பேட்டைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மஞ்சுளா வீட்டில் காணவில்லை என்பதை அறிந்த அன்னக்கிளி அரியானம்பேட்டைக்கு சென்றுள்ளார்.
அதன்பின், அங்கு இருந்த மஞ்சுளாவை சிகிச்சைக்கு வருமாறு அன்னக்கிளி அழைத்துள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து மஞ்சுளா தனது தாய், மாமியார், மாமனார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அன்று இரவு அனைவரும் ஒரே வீட்டில் தூங்கியுள்ளனர்.
இந்நிலையில நேற்று அதிகாலை, அன்னக்கிளி வீட்டில் இருந்த கல்லை எடுத்து மஞ்சுளாவின் தலையில் போட்டுள்ளார். இதில் மஞ்சுளா தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடிக்க இறந்துள்ளார். கொலை சம்பவத்தையடுத்து, மஞ்சுளாவின் தாய் அன்னக்கிளி தொட்டியம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதைப்பற்றி தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின், தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது உடலை முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அன்னக்கிளி போலீஸில் சரணடைந்ததை அடுத்து தொட்டியம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அன்னக்கிளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.