2022-23ஆம் கல்வி ஆண்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்‌ தேர்வெழுதிய மாணவ மாணவியர்களுக்கு அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்களை இன்று முதல் அதாவது ஜூலை 31 மாணவ மாணவியர் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும்,  மறுகூட்டல்‌ மற்றும்‌ மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தேர்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2022- 23ஆம் கல்வி ஆண்டின் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவ மாணவியர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வறைகளைக் கண்காணிக்க 46,870 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், தேர்வு நேரங்களில் முறைகேடுகளைத் தடுக்க 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. தலைநகர் சென்னையில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 180 தேர்வு மையங்களில் மொத்தம் 45, 982 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர்.  


தேர்வை எதிர்கொள்ளாத மாணவர்கள்


இதற்கிடையில் தமிழ் மொழிப்பாடத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. இது அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் பொது வெளியில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.


இந்த சர்ச்சை ஓய்வதற்குள், 45 ஆயிரம் பேர் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுத வரவில்லை என்றும் தகவல் கசிந்தது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகளை 47 ஆயிரம் பேர் எழுதாததாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல் வெளியானது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறைப் படிப்புகளுக்கு முக்கியமாகத் தேவைப்படும் இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடத் தேர்வையே மாணவர்கள் எழுதாதது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேர்வை எழுதாத மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளிக்கப்பட்டு, மறுதேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது.


இதைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகின. தொடர்ந்து பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் / மறு மதிப்பீடு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்பட்டன. மாணாவ்ர்கள் மதிப்பெண்‌ பட்டியலையும்  (Statement of Marks) இணையத்தில் இருந்து பதிவிறக்கம்‌ செய்து உயர்கல்விக்கு விண்ணபித்தனர். 




இந்த நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத்‌ தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்கள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.  இந்த நிலையில், தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண்‌ பட்டியல்‌ இன்று அதாவது ஜூலை 31 முதல்‌ வழங்கப்படும்‌ என்று அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்


பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளி வாயிலாகவும்‌, தனித் தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையம்‌ வாயிலாகவும்‌ அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்களை ( Original Mark Certificates) / மதிப்பெண்‌ பட்டியலை (Statement Of Mark) பெற்றுக்கொள்ளலாம்‌.