உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் பரபரப்பில் இருக்கின்றன தமிழ்நாடு அரசியல் கட்சிகள் இதற்கிடையே தமிழ்நாடு எதிர்கட்சியான அதிமுகவின் கூட்டணியிலிருந்து விலகித் தனித்துப் போட்டியிடப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. 'கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை' என ராமதாஸ் தங்களது கட்சியினருடனான வீடியோ கான்ஃபிரன்சிங்கில் நேற்று விவாதித்துள்ளார். பொதுத்தேர்தலுக்கு ஒரு கூட்டணி, சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு கூட்டணி என கட்சிகள் அவ்வப்போது கூட்டணி மாறுவது தமிழ்நாடு அரசியலுக்குப் புதியதில்லை என்றாலும் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் இடையிலான இந்தப் பிளவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அதிமுகவிலிருந்துதான் வெளியேறியிருக்கோம்..ஆனால்.!


ராமதாஸ் அதிமுகவைப் பற்றிக் காட்டமாக விமர்சித்திருந்தாலும் பாமகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே சுமூகமான உறவு நிலவுவதாகக் கூறியுள்ளார் பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு. அவர் இன்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்,’ ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகக் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் நேற்று ஆலோசனை செய்யப்பட்டது. க்ட்சியினர் எல்லோரும் போட்டியிட சமமான வாய்ப்பிருக்க வேண்டும் என ஒருமித்தக் குரலில் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி தேதி என்னும் நிலையில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் எத்தனைத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்தும் விவாதித்து முடிவு செய்யக் கால அவகாசம் இல்லை என்பதால் பாட்டாளி மக்கள் கட்சி இந்தத் தேர்தலில் மட்டும் கூட்டணியிலிருந்து விலகித் தனித்துப் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது.அதற்கான விண்ணப்பங்களையும் தற்போது பெற்றுவருகிறோம். இதன்காரணமாக அதிமுகவோடு முரண்பாடு ஏற்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. அவர்களோடு நாங்கள் நட்புடன் தான் இருக்கிறோம்.நேற்றைய ஆலோசனையில் கூட அதிமுக குறித்து எங்கள் தலைவர்கள் எந்தவிதமான விமர்சனத்தையும் தெரிவிக்கவில்லை.பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கும்.இதுவெறும் உள்ளாட்சித் தேர்தல்தான். அதிமுகவின் ஜெயக்குமார் கூட ஊடகங்களில் வந்த செய்தியை வைத்துதான் பாமக சொன்னதை விமர்சித்திருக்கிறார். ஊடகங்களில் வந்த செய்தியைக் கொண்டு ஒரு மூத்த தலைவராக அவர் விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும்’ எனத் தனது பேட்டியில் கூறியுள்ளார். 




முன்னதாக இதுகுறித்துக் கட்சி வெளியிட்டிருந்த அறிக்கையில்,


தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று  மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில், எனது தலைமையில், இணைய வழியில் இன்று மாலை நடைபெற்றது.
அக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து நாளையும், நாளை மறுநாளும் ( செப்டம்பர் 15 மற்றும் 16-ஆம் நாட்கள்) விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.