விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கீழ்சிவிரி கிராமத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் 84-வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. சொந்த ஊரில் நடைபெற்ற இ்ந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு அவரது வயதை குறிக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்ட 84 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவருக்கு கிராம மக்கள் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர் ராமதாஸ் தனது பெற்றோர் வாழ்ந்த வீட்டிற்கு சென்றார். அங்கு அவரின் பெற்றோர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கீழ்சிவிரி கிராமத்தில் அமைக்கப்பட்ட விழா மேடைக்கு சென்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- என் வாழ்நாளில் லட்சக்கணக்கான வரவேற்பை பார்த்துள்ளேன். ஆனால் எனது ஊரில் வரவேற்போடு எனது மக்களோடு இன்று நான் இருக்கிறேன். இதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்குள்ள மாரியம்மன் கோவிலில் தான் எனது நண்பர்களுடன் பம்பரம், கில்லி, கோலி, ஓடி பிடித்து விளையாடி இருக்கிறேன். விடிய, விடிய தெருக்கூத்து பார்த்த ஞாபகங்கள் வருகிறது. 83 ஆண்டுகள் முடிந்து 84-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இங்கு குளம் வெட்டி இருக்கிறார்கள். என்னுடைய கண்ணீர் முழுவதும் அந்த குளத்தில் கலக்கிறது. இன்னும் எத்தனை வயதானாலும், நடக்க முடியாவிட்டாலும் கோலூன்றி சென்று மக்களுக்காக பாடுபடுவேன் என கூறினார்.
மேலும் கிராம மக்களிடம் மருத்துவர் ராமதாஸ் கூறிய கவிதை.
என்ன தவம் செய்தேனோ இம்மண்ணில் நான் பிறக்க, ஏது தவம் செய்தேனோ இன்று உங்களோடு நான் இருக்க!
என்ன தவம் செய்தேனோ இம்மண்ணில் என் ஊரில் இன்று நான் கால் பதிக்க, என்ன தவம் செய்தேனோ எம் மக்காள் இன்று உங்களோடு நான் இருக்க!
முந்தி தவமிருந்து முந்நூறு நாள் சுமந்து என்னை ஈன்றெடுத்த என் தாயே,
எனக்கொரு வரம் தருவாய் எழு பிறப்பும் உன் வயிற்றில் யான் பிறக்க அருள் புரிவாய்!
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி வாழ்ந்த இச்சிற்றூரில் யான் பிறக்க என்ன தவம் செய்தேனோ!
இந்த கவிதையை கூறும் போது அவரை மீறி கண்ணீர் மல்க கவிதையை கூறினார் மருத்துவர் ராமதாஸ் கிராம மக்களிடம் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்